களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு

களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-02-23 23:30 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோடு சோதனை சாவடியில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி இரவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பயங்கரவாதிகள் வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக திருவிதாங்கோடு அடப்புவிளை பதார் தெருவை சேர்ந்த அப்துல் சமீம் (29), நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் நகரை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் மீது உபா சட்டமும் பாய்ந்தது.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பயங்கரவாதிகளையும் போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது 2 பேருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் நெல்லை, காயல்பட்டினம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மக்களோடு மக்களாக கலந்திருந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

ஆவணங்கள்

மேலும் கொலை செய்தது எப்படி? கொலைக்கு முன்னரும், பின்னரும் 2 பயங்கரவாதிகளும் எங்கெல்லாம் சென்றார்கள்? யாரை எல்லாம் சந்தித்தார்கள்? என்ற விவரங்களை எல்லாம் போலீசார் சேகரித்தனர். இதுதொடர்பாக பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். அதோடு அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோரின் வீடுகளுக்கு போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து விசாரணை முடிந்து 2 பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது பயங்கரவாதிகள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதிக்கும், கோர்ட்டுக்கும் மனு அளித்தனர்.

என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு

இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கை என்.ஐ. ஏ.வுக்கு மாற்ற தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து கொலை வழக்கு தொடர்பாக குமரி மாவட்ட போலீசார் சேகரித்து வைத்திருந்த ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர். கொலை வழக்கானது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டதால் தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் கைதான பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

மேலும் குமரி மாவட்டத்திலும் பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த விசாரணைக்காக தக்கலை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கி தரும்படி குமரி மாவட்ட போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்