ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.6¼ லட்சம் மோசடி டாக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு

ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த டாக்டர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-02-23 22:30 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மாங்கோடு அம்பலக்காலா பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் சுபி (வயது 27), திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித் தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் ரெயில்வே துறையில் வேலைக்கு செல்ல தேர்வு எழுதியிருந்தேன். இதற்கிடையே பள்ளியாடி கழுவம்திட்டவிளையை சேர்ந்த ராபி (45) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக அவர் கூறினார். அதை நான் நம்பினேன். பின்னர் வேலை வி‌‌ஷயமாக புத்தளத்தை சேர்ந்த டாக்டர் நலம்குமார் என்ற ராஜ்குமார் (45) என்பவரிடம் பேசும்படி கூறி அவரது செல்போன் நம்பரையும் கொடுத்தார்.

மோசடி

அதன்படி நலம்குமாரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது ரெயில்வே துறையில் வேலை வாங்கி தரவேண்டும் என்றால் ரூ.11 லட்சம் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதைத் தொடர்ந்து நான் ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தை நலம்குமாரிடம் நேரடியாகவும், வங்கி மூலமாகவும் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு எனக்கு வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டனர். இந்த மோசடியில் நலம்குமார் நடத்தி வரும் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் செவிலியர் சிம்லா மற்றும் பள்ளிவிளையை சேர்ந்த ப‌ஷீர் (52) ஆகியோரும் கூட்டு சேர்ந்துள்ளனர். எனவே இதுதொடர்பாக 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

4 பேர் மீது வழக்கு

இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்பேரில் ராபி, நலம்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் நலம்குமார் மீது ஏற்கனவே முன்னாள் ராணுவ வீரர் அருள்தாஸ் என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கு உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அவர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்