கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

சேலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை செய்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-24 00:30 GMT
சேலம்,

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடி அருகே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த என்ஜினீயர் சரண் (வயது 22), ஓமலூர் பகுதியை சேர்ந்த பட்டதாரி கோகுல் (25) ஆகியோர் என்பதும், அவர்கள் பெங்களூருவில் இருந்து போதை மருந்து தடவிய ஸ்டாம்ப் வில்லைகள் மற்றும் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து அவர்களிடம் இருந்து 20 ஸ்டாம்ப் வில்லைகள் மற்றும் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அவர்கள் 2 பேரும், சேலத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலருக்கு போதை ஸ்டாம்ப் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் அதனை அவர்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கும் ரகசியமாக விற்றுள்ளனர்.

போதை மருந்து தட விய ஒரு ஸ்டாம்ப் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்துவந்ததும், இந்த தொழிலில் பலருக்கு ரகசிய தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சரண், கோகுல் ஆகியோர் மீது போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அவர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்