கடலில் மிதந்து வந்த மரப்பெட்டியில் வெள்ளை நிற பவுடர் போதைப்பொருளா? அதிகாரிகள் விசாரணை

வேளாங்கண்ணி அருகே கடலில் மிதந்து வந்த மரப்பெட்டியில் வெள்ளை நிற பவுடர் இருந்தது. அது போதைப்பொருளா? என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-24 23:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கடல் பகுதியில் நேற்று முன்தினம் மரப்பெட்டி ஒன்று கடலில் மிதந்து வந்தது. இதை பார்த்த மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அந்த பெட்டியை நேற்று கைப்பற்றி சோதனை நடத்தினர்.

அதில் வெள்ளை நிற பவுடர் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த பெட்டியை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் அந்த மரப்பெட்டியை ஆய்வு செய்து வருகின்றனர்.

போதைப்பொருளா?

அந்த பெட்டி எங்கிருந்து வந்தது? வெள்ளை நிறத்தில் உள்ள பவுடர் போதைப்பொருளாக இருக்குமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறிய தாவது:-

செருதூர் கடலில் மிதந்த வந்த மரப்பெட்டியில் உள்ள வெள்ளை நிற பவுடர் குறித்து திருச்சியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்து அந்த பவுடரை ஆய்வு செய்த பிறகு தான் அது போதைப்பொருளா? அல்லது எந்த வகையான பவுடர் என்பது தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்