சேலத்தில், 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக சேலத்தில் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2020-02-25 00:00 GMT
சேலம்,

கேரளா, ஆந்திரா உள்பட சில மாநிலங்களில் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பலரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தவுபிக் (வயது 27), அப்துல்சமீம்(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சோதனை

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அவர்கள் பெங்களூரு, கொச்சி ஆகிய இடங்களில் உள்ள பலரிடம் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது. மேலும் சேலம் முகமதுபுறா பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து இருப்பதும், இவர் சேலத்தில் உள்ள சில கடைகளில் வெவ்வேறு பெயர்களில் சிம்கார்டு பெற்று அதை தீவிரவாதிகளுக்கு வழங்கியதும் தெரியவந்தது.

இதையொட்டி கடந்த 2 மாதத்திற்கு முன்பு கியூ பிரிவு போலீசார் அப்துல்ரகுமானை கைது செய்தனர். இந்த நிலையில் கொச்சியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் சேலத்திற்கு வந்தனர். பின்னர் சேலம் முகமதுபுறா பகுதியில் உள்ள அப்துல்ரகுமான் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள்

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அவரது வீட்டில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அம்மாபேட்டை, ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதிகளிலும் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணையை முடித்துக்கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலத்தில் இருந்து நேற்று மதியம் கொச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது கடந்த 2 நாட்களாக சேலம் மற்றும் ஓமலூர், அம்மாபேட்டை பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சேலம் முகமதுபுறா பகுதியில் உள்ள அப்துல்ரகுமான் வீட்டில் இருந்து, பிரதமர் மோடி குறித்த புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் நகல் உள்ளிட்ட பல ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்துச்சென்றதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்