கோவையில், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-02-25 22:30 GMT
கோவை,

வீடுகளுக்கு பயன்படுத்தும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.149 உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்தும், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் மாதர் சங்கம் சார்பில் கோவை காந்திபுரத்தில் உள்ள சங்க அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாதர்சங்க அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கியாஸ் சிலிண்டர் விலையை மாதம், மாதம் மத்திய அரசு உயர்த்தி வருகிறது. கியாசுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்து இருப்பதால் இப்போது சிலிண்டர் விலை ரூ.950 ஆக உயர்ந்து விட்டது. ஏழை மக்களுக்கு இலவச கியாஸ் கொடுக்கிறோம் என்கிறார்கள். ஒரு சிலிண்டர் முடிந்தால் அவர்களும் அடுத்த சிலிண்டரை ரூ.950 கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. இந்தியாவில் ஏழை மக்கள் அந்த அளவுக்கு பணம் கொடுத்து வாங்க முடியுமா?. இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறது.

ஆனால் ஏழை மக்களை சிரமத்தில் ஆழ்த்துகிறது. மத்திய அரசு கியாஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், நாமம் வரைந்தும் நாற்காலியில் வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாதர் சங்க நிர்வாகிகள் ராதிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒரு மணிநேர ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்