மர்ம விலங்கு கடித்து குதறியதில் மேலும் ஒரு ஆடு பலி

ஜோலார்பேடடை அருகே மர்ம விலங்கு மீண்டும் கடித்து குதறியதில் 3 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதனால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

Update: 2020-02-26 22:00 GMT
ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி ஊராட்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 27). அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மற்றும் சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த வேடி. கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்து குதறியதில் இவர்கள் வளர்த்த 3 ஆடுகள் பரிதாபமாக செத்தன.

இந்த ஆடுகளை சிறுத்தை தான் கடித்து கொன்று இருக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் நம்பினர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பத்தூர் உதவி வனப் பாதுகாவலர் ராஜ்குமார், வனச் சரக அலுவலர் சோலைராஜன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் அவர்கள் சி.சி.டி.வி.கேமராக்களை பொறுத்தி கண்காணித்து வந்தனர். மறுநாள் பார்வையிட்டதில் அந்த கேமராவில் நரி நடமாடும் காட்சி பதிவாகியிருந்தது. இதனால் 3 ஆடுகளை நரி கடித்து குதறி கொன்றதாக வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த திருப்பதி தனக்கு சொந்தமான ஆட்டை வீட்டின் வெளியே கட்டி வைத்திருந்தார். நேற்று காலை ஆடு மாயமாகி இருந்தது. நிலத்தில் சென்று பார்த்தபோது, அந்த ஆடு மர்ம விலங்கு கடித்து குதறியதில் பரிதாபமாக இறந்து கிடந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இரவு நேரங்களில் மர்ம விலங்கு நடமாட்டத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்