குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியால் கலவரத்தை தூண்ட பா.ஜ.க.வினர் திட்டமிடுகிறார்கள் கி.வீரமணி பேட்டி

குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியால், தமிழகத்தில் கலவரத்தை தூண்ட பா.ஜ.க.வினர் திட்டமிடுகிறார்கள் என கி.வீரமணி கூறினார்.

Update: 2020-02-28 00:00 GMT
தஞ்சாவூர்,

டெல்லியில் ஒரே நேரத்தில் அதுவும் அமித்‌ஷா வசமுள்ள உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் இருக்கக்கூடிய இடத்தில் நடந்த அந்த கலவரம் பற்றி நீதிமன்றங்களே கண்டித்து இருக்கிறது. காவல்துறை அதிகாரிகளை எல்லாம் கண்டித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய தமிழகத்தில் இப்போது பா.ஜ.க.வினர் பேரணி என்ற பெயரில் கலவரத்தை தூண்ட திட்டமிடுகிறார்கள். எனவே பா.ஜ.க.வினர் பேரணிக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை தேவையில்லாமல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இவைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக இருக்கின்றன என்பதை பொதுவானவர்கள் அத்தனை பேரும் சொல்கிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு மீண்டும் ஆதரவு கொடுக்கிறோம் என்று கூறி ஓரமாக கூட்டம் நடத்தினால் அதுபற்றி கவலையில்லை. ஆனால் இந்த 3 திட்டங்களுக்கு எதிராக யார் போராட்டம் நடத்துகிறார்களோ அவர்களுக்கு நேர் எதிராக பேரணி நடத்தபோகிறோம் என்று சொன்னால் அவர்கள் கலவரத்தை தூண்டிவிட்டு வேறுவிதமான திட்டங்களுக்கு தயாராக இருக்கிறார்கள் என்று பொருள்.

திசை திருப்புவதற்காக...

அதனுடைய விளைவு அரசாங்கங்களுக்கு கேடாக இருக்கும். மக்களை பொருத்தவரையில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மத்திய அரசை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் 37 சதவீத ஓட்டுகள் தான் வாங்கினார்கள். 63 சதவீதம் பேர் அவர்களுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். அதற்கு பிறகு நடந்த ஒரு தேர்தலில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. அத்தனை தேர்தலிலும் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.

பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டு இருக்கிறது. கடன்சுமை அதிகமாக இருக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லை. ஏற்கனவே பா.ஜ.க.வினர் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதை எல்லாம் திசை திருப்புவதற்காகவும், எதிர்க்கட்சிகள் இதை சுட்டிகாட்டக்கூடாது என்பதற்காகவும் கலவரத்தை ஒரு ஆயுதமாக கொண்டு செயல்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நடைமுறைப்படுத்த இந்த 3 திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து இருக்கிறது. அதன் விளைவு அவர்களே மிகப்பெரிய விபரீதத்தை உருவாக்கி கொள்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு மோசடி நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வினால் நமது பிள்ளைகளின் உயிர் பறிக்கப்படுகிறது. இதுவரை 9 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என அடுத்த மாதம்(மார்ச்) 23-ந் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

நீட் தேர்வை அகற்றும் வரையில் எங்கள் போராட்டம் ஓயாது. தொடர்ந்து நடக்கும். இது தமிழக அரசுக்கு எதிரானது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நீட் தேர்வை அவர்களும் எதிர்க்கின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இருப்பதில் குளறுபடி இருக்கிறது. ஒரு பக்கம் சட்டமும், இன்னொரு பக்கம் ஏற்கனவே அளித்த அதிகாரமும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்