பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டிகள் ; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பெரம்பலூரில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2020-02-28 22:15 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு உடல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. அந்த போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. போட்டியினை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு வகுப்பு வாரியாக பரிசுகளும், சான்றிதழ்களையும் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு வழங்கி பாராட்டினார். முதல் 2 இடங்களை பிடித்த வீரர்- வீராங்கனைகள் மண்டல அளவில் நடைபெறும் தடகள போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை தடகள பயிற்சியாளர் கோகிலா மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்