மாநகராட்சி குப்பை கிடங்கில் விடிய,விடிய எரிந்த தீ - 16 மணி நேரம் போராடி அணைப்பு

திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கிடங்கில் விடிய,விடிய எரிந்த தீ 16 மணி நேர போராட்டத்துக்கு பின் அணைக்கப்பட்டது.

Update: 2020-02-28 22:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் முருகபவனத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கு 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு கொட்டப்பட்டன. இதனால் குப்பை கிடங்கு முழுவதும் சுமார் 15 அடி உயரத்துக்கு மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

இதனால் ரூ.13 கோடி செலவில் குப்பை கிடங்கை சுத்தம் செய்யும் பணி ஒருசில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக அங்கு குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு குப்பை கிடங்கு தீப்பிடிக்க தொடங்கியது. அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்தது. ஆனால், தொடர்ந்து காற்று வீசியதால் விடிய, விடிய தீ எரிந்து கொண்டே இருந்தது. இதனால் தீயணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனினும், தொடர்ந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.

இதனால் சுமார் 16 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அதிகாலை 5 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து குப்பை கிடங்கில் மீண்டும் தீ பிடிக்காமல் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சுழற்சி முறையில் மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் தீப்பிடித்தால் உடனடியாக அணைக்கும் வகையில் 2 தண்ணீர் லாரிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் குப்பைகள் எரிந்து அதில் இருந்து கிளம்பிய புகை, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் குப்பை கிடங்கை விரைவாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்