கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டம்

நெல்லையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-02 22:45 GMT
நெல்லை, 

நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கை ஒடிந்த தொழிலாளியின் மருத்துவ விடுப்பை மறுத்து, ஆப்சென்ட் பதிவு செய்து சம்பளம் பிடித்ததை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான விடுப்புகளை மறுக்க கூடாது. அதிக நேரம் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தக்கூடாது. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதிக நேர பணிக்கு பிடித்தம் செய்த சம்பளத்தை திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற் றது.

சங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் ஜோதி, நெல்லை மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் துணைத்தலைவர் மரிய ஜான்ரோஸ், இணை பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் குமரகுருபரன், சங்கிலி பூதத்தான், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் முத்துகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக நின்றிருந்தனர். மேலும் கை ஒடிந்த தொழிலாளிக்கு ஆப்சென்ட் போட்டதை கண்டித்து, அனைவரும் தங்களது கையில் மருத்துவ கட்டு போட்டது போல் கட்டி, ரத்தம் சிந்தியது போல் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்