ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் சரக்கு ஆட்டோ நிறுத்தம் செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு

ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் சரக்கு ஆட்டோ நிறுத்தம் செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி, அதன் உரிமையாளர்கள்- டிரைவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2020-03-03 00:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் வி.பி.சிந்தன் நினைவு லோடு (சரக்கு) ஆட்டோ உரிமையாளர்கள்- ஓட்டுனர்கள் சங்கத்தினர், மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர் சங்கத்தினருடன் வந்து கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் உள்ள பொது இடத்தில் நாங்கள் கடந்த 10 ஆண்டு களாகவே சரக்கு ஆட்டோ நிறுத்தம் அமைத்து சேவை செய்து வருகிறோம். தற்போது அந்த இடத்தில் சரக்கு ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எங்களுக்கு ஏற்கனவே இருந்த இடத்தில் சரக்கு ஆட்டோ நிறுத்தம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆழ்துளை கிணற்றில் விழும்...

பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சத்யா, கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் நகரில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த அரசியல் தலைவர்களுக்காக சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் பல்வேறு இடங்களில், மீண்டும் அமைக்கப்படவில்லை. மேலும் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரின் இருபுறமும் அதிக அளவிலான புழுதி மண் தேங்கி மணல் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. அதனை அகற்ற வேண்டும். மேலும் சாலையில் தேவைப்படும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆலத்தூர் தாலுகா கீழமாத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த வெங்கடாசலம் கொடுத்த மனுவில், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்பதற்கு 2 கருவிகள் செய்துள்ளேன். ஆனால் அந்த கருவிகளுக்கு காப்புரிமை பெறுவதற்கு கடந்த ஒரு மாதமாக முயன்றும் பெறமுடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நான் தயாரித்த கருவிகளை ஆய்வு செய்து, அதற்கு காப்புரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

274 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 274 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அவர் அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் 2019-ம் ஆண்டின் சிறந்த பட்டு விவசாயிகளான பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்திற்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், என்.புதூர் கிராமத்தை சேர்ந்த அப்பாஸ் மனைவி ஜபைதா பேகத்துக்கு 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், நெ.புதூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமிக்கு 3-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கி பாராட்டினார்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி, உதவி ஆணையர் (கலால்) ஷோபா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை கலெக்டர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்