கடனை செலுத்த முடியாததால் விவசாயி தற்கொலை: வங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் மனைவி மனு

மயிலாடும்பாறை அருகே கடனை செலுத்த முடியாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயியின் மனைவி, கலெக்டரிடம் மனு அளித்தார்.

Update: 2020-03-02 22:30 GMT
தேனி,

தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறையை சேர்ந்த தர்மலிங்கம் என்ற விவசாயி, வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லதா, ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், “எங்கள் ஊரையொட்டி 4½ ஏக்கர் நிலம் எங்களுக்கு உள்ளது. இதில், எனது கணவர் விவசாயம் செய்து வந்தார். வறட்சியால் எங்கள் பொது கிணறும் வறண்டு போனது. இதனால் கம்பத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.7 லட்சம் கடன் பெற்று 2 ஆழ்துளை கிணறு அமைத்தோம். அவையும் நீரின்றி வறண்டு போனது. இந்நிலையில், வங்கி தரப்பில் கொடுத்த கடனை செலுத்த சொல்லி நெருக்கடி கொடுத்ததால் தான் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இப்போது வங்கி நிர்வாகத்தினர் நாங்கள் வாங்கிய ரூ.7 லட்சம் கடனுக்கு ரூ.5 லட்சம் வட்டி கேட்டு மிரட்டுகின்றனர். எனவே, இந்த கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும். எனது மகனுக்கு அவனது கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். எனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், “எங்கள் ஊரில் உள்ள அரிசி ஆலையை சுற்றி 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆலையில் இருந்து தூசி அதிக அளவில் வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஆலை கழிவுகள், அதிகபடியான தூசியால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்புச்செயலாளர் விடியல் வீரப்பெருமாள், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களுடன் எம்.சுப்புலாபுரத்தில் பெயர் பலகை விழுந்து படுகாயம் அடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எம்.சுப்புலாபுரத்தில் தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கடந்த ஆண்டு தொகுப்பு வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் சிலர் காயம் அடைந்தனர். அதுபோல், கடந்த மாதம் கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை விழுந்து புவனேஸ்வரி என்ற சிறுமி பலத்த காயம் அடைந்தாள். எனவே, இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமராஜ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடக மைய மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்று இவர் தனது மனைவி பாலம்மாளுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது ராமராஜ் தனது கழுத்தில் செருப்பை மாலையாக அணிந்து வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர் தனது மனைவியுடன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலெக்டரிடம் அவர் ஒரு மனு அளித்தார். அதில், “பெரியகுளம் இ.புதுக்கோட்டை பகுதியில் நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில் முருகமலையில் இருந்து பெரியவாளாடி பகுதிக்கு சாலை அமைப்பதற்காக எனது விவசாய நிலம் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. எனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மா மரங்களையும் வேரோடு பிடுங்கிவிட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எனது விவசாய நிலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்