வேளாங்கண்ணி அருகே திருட்டுபோன அம்மன் சிலை மீட்பு; வாலிபர் கைது

வேளாங்கண்ணி அருகே திருட்டுபோன அம்மன் சிலையை மீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-05 00:00 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சின்னத்தும்பூரில் தனியாருக்கு சொந்தமான செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த கோவிலில் உள்ள மாரியம்மன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிசென்று விட்டனர்.

இதுகுறித்து நாகப்பட்டினம் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ராகவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், டி.ஐ.ஜி.லோகநாதன் ஆகியோரின் உத்தரவின்பேரில், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் ஆலோசனைப்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

சிலை மீட்பு-வாலிபர் கைது

இந்த வழக்கு தொடர்பாக வேதாரண்யம் மறைஞான் நல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரவேல் மகன் உதயராஜன் (வயது 30) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் அம்மன் சிலையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து, 2 அடி உயரமுள்ள வெண்கல அம்மன் சிலை, குத்துவிளக்குகள் 5, செம்புகள் 6, கவரிங் ஆரம் 2 ஆகியவற்றை பறி முதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்