மராட்டியத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்; 10 நாட்களாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத கவர்னர்

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முறைமுக தேர்தல் நடத்தும் திருத்த மசோதாவுக்கு 10 நாட்களாகியும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

Update: 2020-03-05 22:45 GMT
மும்பை,

மராட்டியத்தில் முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியின் போது, 2017 -ம் ஆண்டு முதல் பஞ்சாயத்து தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், தற்போதைய சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த முடிவு செய்தது.

இதன்படி தற்போது நடந்து வரும் மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பஞ்சாயத்து தலைவர்களை பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்ய வழிவகை செய்யும் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இனிவரும் தேர்தலில் கிராம பஞ்சாயத்து தலைவரை வாக்காளர்கள் நேரடியாக தேர்வு செய்ய மாட்டார்கள். அந்த மசோதா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதார நிறைவேற்றப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக நேற்றுமுன்தினம் தேசியவாத காங்கிரசை சேர்ந்த ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரி ஹசன் முஸ்ரிப் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது அந்த மசோதா தொடர்பான கருத்தை அறிவதற்கு மாநில அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மந்திரி ஹசன் முஸ்ரிப் கூறுகையில், கடந்த காலத்தில் சட்டசபையின் இரு அவைகளும் நிறைவேற்றிய மசோதா அட்வகேட் ஜெனரலின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இல்லை. நடைபெற உள்ள கிராம பஞ்சாயத்து தேர்தல்களை கருத்தில் கொண்டு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட்டால் நல்லது என்றார்.

மேலும் செய்திகள்