பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

ஜோலார்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-03-07 22:15 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் 6 மாத காலமாக சீரான குடிநீர் வழங்குவது இல்லை என கூறப்படுகிறது. மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் தண்ணீர் கிடைப்பதால் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளர் பிரபுவிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் ஆபரேட்டர், ஊராட்சி செயலாளர் ஆகியோரை மாற்றக்கோரி திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் நேற்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பஸ்களை சிறைபிடித்தனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌‌ஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருபானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்