கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் தர்ணா, போலி பட்டாவை காட்டி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலி பட்டாவை காட்டி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2020-03-09 22:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 365 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவும், மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு சுயதொழில் தொடங்க ரூ.20 ஆயிரம் நிதி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இதற்கிடையே சிலுவத்தூர் அருகேயுள்ள கம்பிளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது 50 ஆண்டுகளாக தாங்கள் வசிக்கும் வீட்டுக்கு வேறுசிலர் போலி பட்டா வாங்கி உள்ளனர். மேலும் வீட்டை காலிசெய்யும்படி மிரட்டுவதாக கூறினர். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை, போலீசார் சமரசம் செய்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அதேபோல் திண்டுக்கல் அருகேயுள்ள வாழைக்காய்பட்டி கிராம மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மனு கொடுத்தனர்.

அதில், வாழைக்காய்பட்டி நொச்சிகுளத்தில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய் மற்றும் அதன் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மழைக்காலத்தில் கால்வாயில் தண்ணீர் தேங்காமல் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் ஆக்கிரமிப்புகளால் விவசாய நிலத்துக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பெரிய பள்ளப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர், எங்கள் ஊரின் நடுவே தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அங்கு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் கோவில் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுவார்கள்.

எனவே செல்போன் கோபுரத்தை வேறு இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று கூறி கோ‌‌ஷமிட்டனர். அதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களில் சிலர் மட்டும் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்