திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-11 00:32 GMT
திண்டுக்கல்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனால் கொரோனா பீதியில் உலக நாடுகள் அனைத்தும் உறைந்து போயுள்ளன. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிகப்பாதுகாப்பான முறையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பல நாடுகளில் இதற்கென தனி மருத்துவமனைகள், வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்றே தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டில் நவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகள், சுவாச கருவிகள் மற்றும் அனைத்துவித மருத்துவ உபகரணங்களும் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வார்டு ஆகும். இங்கு 2 படுக்கைகள், சுவாச கருவிகள் என நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளுக்கான பிரத்யேக உடை, மாஸ்க் மற்றும் பிற உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.

வார்டு பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதற்காக துப்புரவு தொழிலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்