சூலூர் அருகே பரபரப்பு பெண் மீது ஆசிட் வீச்சு; மூதாட்டி கைது

சூலூர் அருகே பெண் மீது ஆசிட் வீசிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-14 23:30 GMT
சூலூர்,

கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் செல் லாண்டியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணி (வயது 59). இவரு டைய மனைவி சகுந்தலா (54). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மணியின் வீட்டு அருகே ராமாத்தாள் (80) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பாலுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராமாத்தாள், பழைய இரும்பு சாமான்க ளுக்கு ஈயம் பூசும் வேலை பார்த்து வருகிறார்.

ஆசிட் வீச்சு

இந்தநிலையில், ராமாத்தாளுக்கும், மணிக்கும் முன்விரோதம் இருந்தது. இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மணியின் மனைவி சகுந்தலா, ராமாத்தாள் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராமாத்தாள் வீட்டில் ஈயம் பூசுவதற்காக வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சகுந்தலா மீது வீசினார். இதனால் ஆசிட் பட்டு சகுந்தலாவின் உடல் முழுவதும் வெந்து படுகாயம் அடைந்தார். இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் அவர் அலறித்துடித்தார்.

மூதாட்டி கைது

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சகுந்தலாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் மீது ஆசிட் வீசிய ராமாத்தாளை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்