கூடலூர்-கேரள சாலையில் உலா வந்த காட்டுயானை - வாகன ஓட்டிகள் பீதி

கூடலூர்-கேரள சாலையில் உலா வந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

Update: 2020-03-15 22:45 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் கோடை காலம் தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனத்தில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் ஊருக்குள் அதிகளவு காட்டுயானைகள் வரத்தொடங்கி உள்ளன.

இதற்கிடையில் கூடலூரில் இருந்து நெலாக்கோட்டை, பிதிர்காடு, பாட்டவயல் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. கூடலூர்-கேரள எல்லையான பாட்டவயலில் நீலகிரி மாவட்ட போலீசார் சோதனைச்சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

இங்கு முதுமலை- கேரள வனப்பகுதி உள்ளது. இதனால் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை அடிக்கடி காண முடியும். எனவே வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி கவனமுடன் செல்ல வேண்டும் என 2 மாநில வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் பாட்டவயல் பகுதிக்குள் அதிகளவு வருகிறது. இதனால் எல்லையோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானை பாட்டவயல் பஜாருக்குள் வருகிறது.

பின்னர் கூடலூர்-கேரள சாலையில் நடந்து செல்கிறது. குறிப்பாக நள்ளிரவு ஊருக்குள் வரும் காட்டு யானைகள் அப்பகுதியில் பல மணி நேரம் முகாமிடுகிறது. இதனால் சோதனைச்சாவடியில் அமர்ந்து இருக்கும் போலீசார் பீதியுடன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்தவாறு இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

வனத்துறையினர் காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் தற்காலிகமாக அங்கிருந்து செல்கிறது. பின்னர் சில மணி நேரம் கழித்து இரவில் ஊருக்குள் வந்து விடுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு பாட்டவயல் பஜாருக்குள் காட்டுயானை ஒன்று வந்தது. பின்னர் கூடலூர்-கேரள சாலையில் உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைந்து, வந்த வழியாக திரும்பி அலறியடித்தவாறு ஓடினர்.

மேலும் போலீசாரும் சோதனைச்சாவடி கட்டிடத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காட்டு யானை சாலையில் நடந்து சென்று குறுக்கு வழியாக வனத்துக்குள் புகுந்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, காட்டு யானை தினமும் சாலையில் நடந்து செல்வது வாடிக்கையாகி விட்டது. இதனால் இரவு மட்டுமின்றி பகலிலும் எந்த நேரத்தில் காட்டு யானை ஊருக்குள் வருமோ என்ற அச்சத்தில் சாலையில் செல்லும் நிலை உள்ளது. எனவே எல்லையோர அகழியை வனத்துறையினர் ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்