ஜெயங்கொண்டம் அருகே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது 45 பவுன் நகைகள் மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-16 00:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் ரோட்டில் உள்ள கீழக்குடியிருப்பு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், அவர்கள் மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்த வரதராஜன் (வயது 35), புதுச்சேரி முதல் தெருவை சேர்ந்த நாகராஜ் (39) என்பது தெரியவந்தது. தற்போது இருவரும் புதுச் சேரியில் வசித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம், கல்லாத்தூர், ஆமணக்கந்தோண்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 45 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவர்கள் மீது ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அவர்கள் இருவரை யும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்