ஊத்துக்குளி, உடுமலையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

ஊத்துக்குளி, உடுமலையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Update: 2020-03-15 21:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் அவ்வப்போது குழந்தைகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இந்த தகவலை அறிந்து சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் 15 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலரின் வீட்டில் தஞ்சமடைந்தார். இதன் காரணமாக இருவருக்கும் திருமணம் செய்துவைக்க வாலிபரின் பெற்றோர் திட்டமிட்டு இருந்தனர். இது குறித்து சைல்டு லைன் அமைப்பின் கதிருக்கு தகவல் வந்தது. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பினர், வாலிபரின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து அந்த சிறுமி மற்றும் வாலிபருக்கு கவுன்சிலிங் வழங்கி, திருமணத்தை தடுத்து நிறுத்தி 2 பேரையும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுபோல் உடுமலையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அவரது உறவினரான திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கும் வரும் 30-ந்தேதி திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் ஏற்பாடு செய்திருந்தனர். இத்திருமணம் குறித்து அறிந்த சமூக நலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பினருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சிறுமி வீட்டுக்கு சென்று திருமண ஏற்பாடுகளை தடுத்தனர். மேலும், சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது குற்றம். அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும், கவுன்சிலிங் கொடுத்து விட்டும் அதிகாரிகள் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் திருப்பூர் வந்தனர்.

மேலும் செய்திகள்