கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வதை 15 நாட்கள் தவிர்க்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வதை 15 நாட்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

Update: 2020-03-15 21:30 GMT
ஈரோடு, 

அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க மாவட்ட எல்லையில் கண்காணிப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு நோய் கண்காணிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள், உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளின்படி தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற உபாதைகள் ஏற்பட்டால், உடனடியாக சுகாதார துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும், அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விரைந்து செல்ல வேண்டும்.

தினமும் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டைகள் பயன்படுத்த வேண்டும். கைகளை கழுவாமல் கண், வாய், மூக்கு போன்றவற்றை தொடக்கூடாது. மேற்காணும் முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா உள்ளிட்ட அனைத்து விதமான காய்ச்சல் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக அனைத்து வசதிகளையும் கொண்ட தனிப்பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிக்கூடங்களுக்கும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிக்கூடங்களுக்கும் 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்ட எல்லையோரம் உள்ள தாலுகாக்களான சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளில் உள்ள 4 திரையரங்குகளும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களும் 31-ந் தேதி வரை மூடுவதற்கு உத்திரவிடப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடன் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற இயலும். எனவே அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்