கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு

கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-03-16 23:30 GMT
கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடி வடுகர்பேட்டை பஸ்நிலையம் அருகே வசித்து வருபவர் வீரக்குமார் (வயது 51). இவர் கல்லக்குடியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வாணி (40). நேற்று காலை தங்களது மகளை திருச்சியில் உள்ள கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு, காலை 11 மணி அளவில் கல்லக்குடியில் உள்ள வங்கிக்கு கணவன்-மனைவி இருவரும் சென்றனர்.

பின்னர் இருவரும் மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீரக்குமார் கதவை திறக்க முயன்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு சாற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த 5 பீரோக்களும் திறந்து கிடந்தன. அவற்றில் இருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், தோடு உள்பட 22 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.

வலைவீச்சு

இது குறித்து வீரக்குமார் கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கணவன்-மனைவி இருவரும் வங்கிக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே கல்லக்குடி போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலையம் அருகிலேயே பட்டப்பகலில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்