காதல் ஜோடிகளிடம் பணம்பறித்த போலீஸ்காரர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் கவர்னர் உத்தரவு

காதல் ஜோடிகளிடம் பணம் பறித்த போலீஸ்காரர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-03-17 00:26 GMT
புதுச்சேரி,

புதுவை அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடிகளை பெரியகடை போலீஸ்காரர் சதீஷ்குமார், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காதல் ஜோடிகளை மிரட்டி போலீசாரே பணம் பறித்த சம்பவம் புதுவை காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கவர்னர் ஆய்வு

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி நேற்று பெரியகடை போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பெடி நிலைய அதிகாரியான இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், முருகன் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

அப்போது கவர்னர் கிரண்பெடி போலீசார் மத்தியில் கூறியதாவது:-

கிரிமினல் வழக்கு

பெரியகடை காவல்நிலையம் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதில் என்ன நடந்தது? என்பதை தெரிந்துகொண்டுதான் வந்துள்ளேன். யாருடைய உத்தரவின்பேரில் போலீசார் சோதனைக்கு சென்றனர்?

அப்போது பெண் போலீசாரை ஏன் அழைத்து செல்லவில்லை. இதில் தவறு நடந்திருந்தால் அது நீதியல்ல. புகார்கள் வந்தால் அதை யார் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்கள்? பீட் ஆபிசர்களின் பணி என்ன?

இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

தொடர்ந்து அவர் கோரிமேட்டில் உள்ள ஐ.ஆர்.பி. அலுவலகத்துக்கும் சென்று விசாரித்தார்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் அபாயம் இருப்பதால் இந்த ஆய்வின்போது முகக்கவசம் அணிந்து இருந்தார். அவருடன் வந்திருந்த தனிச்செயலாளர் ஸ்ரீதரன் உள்ளிட்டோரும் முகக்கவசம் அணிந்தபடியே சென்றனர்.

மேலும் செய்திகள்