மாவட்டம் முழுவதும் 1,069 பள்ளிகள் மூடப்பட்டன

கரூர் மாவட்டத்தில் 1,069 பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் அங்கன்வாடி குழந்தைகளின் வீடுகளுக்கு நேரில் சென்று உணவு வினியோகிக்கப்பட்டது.

Update: 2020-03-17 22:30 GMT
வீரராக்கியத்தில் அங்கன்வாடி குழந்தையின் வீட்டிற்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்ட காட்சி.
கரூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் 1,069 பள்ளிகள், 18 கல்லூரிகள், 1,052 அங்கன்வாடி மையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள், 165 டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள், ரிசார்ட்டுகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இவை யனைத்தையும் வருகிற 31-ந்தேதி வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக சுகாதார முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நவீன தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரராக்கியம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர் மற்றும் அங்கன்வாடி மையப் பணியாளர்கள் உணவு பொருட்களை வழங்கினார்கள். 

மேலும் செய்திகள்