சிறுவனை கடத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு

கெலமங்கலத்தில் சிறுவனை கடத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2020-03-17 23:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் மசூதி தெருவை சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 38). இவரது மகன் இஸ்மாயில் (9). சாதிக்பாஷாவின் சோடா கம்பெனியில், கெலமங்கலம் விருப்பாச்சி கோவில் தெருவை சேர்ந்த பாபு என்பவரின் மகன் அல்டாப் (30) என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் இஸ்மாயில் மாயமானான். விசாரணையில் சோடா கம்பெனியில் வேலை செய்து வந்த அல்டாப் ஒரு லட்சம் ரூபாய்க்காக சிறுவனை கடத்தி சென்றதும், பணம் கொடுக்காததால், கெலமங்கலத்தை அடுத்த பேவநத்தம் மலையில் இருந்து கீழே தள்ளி சிறுவன் இஸ்மாயிலை கொலை செய்ததும் தெரியவந்தது.

ஆயுள் தண்டனை

இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்டாப்பை கைது செய்தனர்.இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அல்டாப் தலைமறைவானார். 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அல்டாப்பை கடந்த ஆண்டு அக்டோபரில் தனிப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அசோகன் குற்றம் சாட்டப்பட்ட அல்டாப்பிற்கு ஆயுள் தண்டனையும், 2,500 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால், 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலாயுதம் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்