டிக்-டாக் வீடியோ அனுப்பியதை கண்டித்த மெக்கானிக்கை தாக்கிய 3 நண்பர்கள் கைது

டிக்-டாக் வீடியோ அனுப்பியதை கண்டித்த மெக்கானிக்கை தாக்கிய 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-03-17 23:30 GMT
சூலூர்,

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் மதன கண்ணன் (வயது 25). இவர் தற்போது கோவையை அடுத்த அரசூர் ஊத்துப்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

இவரது நண்பர்களான திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அம்சத்ராஜா (32), விழுப்புரம் மாவட்டம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாரிமுத்து (25), தென்காசி சுரண்டையை சேர்ந்த பிரதீப் (27) ஆகியோர் பெண்கள் குறித்து சில தவறான கருத்துகளை டிக்-டாக் வீடியோவில் பதிவிட்டு மதனகண்ணணுக்கு அனுப்பி வைத்தனர்.

அதை கண்டித்து மதன கண்ணன் அவர்களுக்கு டிக்-டாக் வீடியோ அனுப்பினார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

3 பேர் கைது

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக மதன கண்ணன் தனது நண்பர்களை கோவை அழைத்தார். அதன்பேரில் அம்சத் ராஜா, மாரிமுத்து, பிரதீப் ஆகியோர் ஒரு காரில் கடந்த 15-ந் தேதி அரசூர் வந்து மதன கண்ணன் அறையில் தங்கினர்.அப்போது டிக்-டாக் வீடியோ விவகாரம் தொடர்பாக பேசிய போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து மதன கண்ணனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலூர் போலீசார் அம்சத் ராஜா, மாரிமுத்து, பிரதீப் ஆகிய 3 பேர் மீது 4 பிாிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்