கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கை: அருணாசலேஸ்வரர் கோவிலில் மலேசியா பக்தர்களுக்கு பரிசோதனை

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலேசிய நாட்டை சேர்ந்த பக்தர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-03-17 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலையை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து கோவிலில் கிளிகோபுரத்தின் அருகில் வைத்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை பரிசோதனை செய்த பின்னரே தரிசனம் செய்ய அனுமதி வழங்கினர்.

அப்போது மருத்துவ குழுவினர் பக்தர்களின் நெற்றியில் தெர்மல் ஸ்கேனர் என்ற கருவியை வைத்து அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று பரிசோதனை செய்து விட்டு கிருமி நாசினி மூலம் கைகளை கழுவ செய்த பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பீதியால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

அப்போது மலேசியாவில் இருந்து சாமி தரிசனம் செய்ய குழந்தைகள் உள்பட 18 பேர் வந்தனர். அவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு 100 டிகிரிக்கு மேல் உடல் உ‌‌ஷ்ணம் இருந்தது. இதையடுத்து அவர்களை மருத்துவ குழுவினர் தனியாக அழைத்து சென்று முககவசம் வழங்கினர். பின்னர் இது குறித்து சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவினர் கோவிலுக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மலேசியாவை சேர்ந்தவர்களிடம் அவர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது டாக்டர்கள் அவர்களிடம் காய்ச்சல் ஏதும் உள்ளதா, உடல் சோர்வு இருக்கிறதா என்று பல்வேறு கேள்விகளை கேட்டனர். எங்களுக்கு ஒன்றும் இல்லை. நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் டாக்டர்கள் செல்போன் எண்கள், அவர்கள் செல்ல போகிற இடங்கள் குறித்த விவரங்களை சேகரித்து கொண்டனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாததால் டாக்டர்கள் அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதனால் சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் வளாகத்தில் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி மருந்து பக்தர்கள் நடமாடும் பகுதியில் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் நடந்து செல்லும் இடத்தில் உள்ள இரும்பு கைபிடிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்