கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குறைந்த விலையில் கிருமிநாசினி தயாரிக்கலாம்: கலெக்டர் தகவல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குறைந்த விலையில் கிருமிநாசினி தயாரிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-17 22:51 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள மாநில எல்லையையொட்டிய சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி சோதனை சாவடியில் கண்காணிப்புக்குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளை கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு நோய் தொற்று அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 600 பேர் கேரளாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு வருகிறார்கள். அவர்களை பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுகிறார்கள். இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை.

உடுமலையில் உள்ள சுற்றுலா தலங்கள், அருவி உள்ளிட்ட பகுதிகளை மூட உத்தரவிடப்பட்டு ள்ளது. சினிமாதியேட்டர்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், சந்தைகளில் மக்கள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருமல், தும்மல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிய வேண்டும் என்றால் 0421 1077, 0421 2971199 என்ற எண்ணிலும் திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொள்ளலாம். பொதுமக்கள் அத்தியாவசியம் ஏற்பட்டால் வெளியூர் பயணம் செய்யலாம். முடிந்தவரை சுற்றுலா, வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்கலாம்.

கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்புகிறார்கள். அவ்வாறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிய வேண்டும் என்று விரும்பினால் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு, முகக்கவசம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முகக்கவசத்தை விற்பனை செய்யக் கூடாது. அதிக விலைக்கு விற்பனைசெய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிருமிநாசினி விலை அதிகம் மற்றும் தட்டுப்பாடு போன்றவற்றை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை மூலமாக கிருமிநாசினி தயாரிக்கும் வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சி முறையும் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கோட்ட அளவில் அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 முதல் ரூ.60-க்குள் 1 லிட்டர் கிருமி நாசினியை தயாரிக்க முடியும். 32 கிராம் குளோரினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை நாமே தயாரிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்ற கேள்வி இருக்கிறது. மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி இருமல், சளி, சுவாச திணறல், காய்ச்சல் உள்ளவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும். இதுபோன்ற அறிகுறி உள்ளவர்களுடன் இருப்பவர்களும் முகக்கவசம் அணியலாம். அனைவரும் பயப்பட தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் இருப்பது அவசியம். நோய் தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா அறிகுறி இருப்பவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து முறையான சிகிச்சை வழங்க மருத்துவ அதிகாரிகள், ஆம்புலன்சு ஓட்டுனர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்