களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்த யானை அட்டகாசம் தென்னை, வாழை மரங்களை பிடுங்கி சேதம்

களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்த யானையானது தென்னை, வாழை மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

Update: 2020-03-18 23:00 GMT
களக்காடு, 

களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்த யானையானது தென்னை, வாழை மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

தோட்டங்களுக்குள் புகுந்த யானை 

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் அடிக்கடி யானைகள், மிளாக்கள், காட்டுப்பன்றிகள் புகுந்து வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களை பிடுங்கி சேதப்படுத்துகின்றன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக களக்காட்டை அடுத்த சிதம்பரபுரம் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை, அங்குள்ள தென்னை, வாழை மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து சேதப்படுத்தின.

அங்குள்ள ஒரு தோட்டத்தில் 16 தென்னை மரங்களையும், மற்றொரு தோட்டத்தில் 27 வாழை மரங்களையும் யானை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. இதனால் தோட்டங்களுக்கு செல்வதற்கு விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

வனப்பகுதிக்குள் விரட்ட... 

இதுகுறித்து திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ உத்தரவின்பேரில், வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் சென்று, சேதம் அடைந்த தென்னை, வாழை மரங்களை பார்வையிட்டனர்.

தோட்டங்களுக்குள் புகுந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அங்கு இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்