பொது குடிநீர் குழாய் அமைப்பதை எதிர்த்து ஒரு தரப்பினர் மறியல்

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க வீட்டுக்குடிநீர் இணைப்புகளை துண்டித்து விட்டு பொது குடிநீர் குழாய் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-18 22:15 GMT
கே.வி.குப்பம், 

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் ஊராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலருக்கு குடிநீர் கிடைக்கவில்லை. எனவே வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பை ரத்து செய்து விட்டு அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் பொது குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடக்கிறது

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் குடியாத்தம் நோக்கி வந்த டவுன் பஸ்சை (தடம் எண் 23) 15-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரமே‌‌ஷ்குமார், ஆடிட்டர் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் அங்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடைய மேல்மாயில் ஊராட்சி செயலாளர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

மேல்மாயில் பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. இதனால் தனி நபர்களுக்கு அளித்துவரும் குழாய் இணைப்புகளை துண்டித்து விட்டு பொதுவாக பலருக்கும் பயன்படும் வகையில் தெரு குழாய்கள் இணைப்பை ஏற்படுத்தி வருகிறேன். இதற்கு செம்மண் குட்டையிலிருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இப்பகுதியை சேர்ந்த ஒருவர் என்னை பணி செய்ய விடாமல் தடுத்தும், தகாத வார்த்தைகளால் பேசியும், அவர் சொன்னது சொன்னபடி தனியார் வீடு களுக்கு தனித்தனி இணைப்பு தர வேண்டும் என்று மிரட்டியும் வருகிறார். இதுகுறித்து கலெக்டர், தாசில்தார், போலீசாருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன். என்று தெரிவித்தார்.

இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்