கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: நாமக்கல்லில் பஸ்களில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல்லில் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2020-03-18 23:00 GMT
நாமக்கல்,

தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டு உள்ளன.

இதற்கிடையே மத்திய அரசு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை வருகிற 31-ந் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நாமக்கல்லில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நரசிம்மசாமி கோவில் மற்றும் அரங்கநாதர் கோவில்கள் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கூட்டமாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா மூடப்பட்டு உள்ளது. மேலும் நாமக்கல் மலைக்கோட்டைக்கு செல்லவும் வருகிற 31-ந் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மலைக்கோட்டை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாமக்கல் பஸ்நிலையத்தில் பஸ்களில் பயணிகள் ஏறும் இடம், கைப்பிடிகள் உள்ளிட்டவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர் (வணிகம்) கலைவாணன், கோட்ட மேலாளர் காங்கேயன், கிளை மேலாளர்கள் பாண்டியன், பழனிவேல், உதவி பொறியாளர் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பஸ் பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களிடம் வழங்கினர். மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு முகக் கவசம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.

மேலும் செய்திகள்