சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-03-19 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒஜிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டா என்கிற ஆறுமுகம்(வயது 66). கடந்த 2018-ம் ஆண்டு அருகே உள்ள பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமியை வழிமறித்த ஆறுமுகம் அவளுக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினாள்.

இதையடுத்து சிறுமியின் தாயார் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

5 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் முடிவில் ஆறுமுகம் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.

இதையடுத்து ஆறுமுகத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி பரமராஜ் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்