போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் எழுத்தர் பணி இடைநீக்கம்

போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றதாக வந்த புகாரின் பேரில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தலைமை எழுத்தர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2020-03-20 00:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய கோவில்களில் ஒன்றாக கருதப்படுவதால், இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலுக்கு என தனியாக உதவி ஆணையரை நியமித்து உள்ளது.

கோவில் வளாகத்திலேயே உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தலைமை எழுத்தராக பெரியசாமி (வயது 55) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 1990-ம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்ந்த இவர் பின்னர் நிரந்தரமாக்கப்பட்டு, பதவி உயர்வு மூலம் தலைமை எழுத்தர் நிலைக்கு உயர்ந்தார்.

அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ள இவர் பதவி உயர்வுக்காக, வேறு ஒருவரின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை போலியாக சமர்ப்பித்து இருப்பதாக கோவில் உதவி ஆணையர் ரமேசுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் தலைமை எழுத்தர் பெரியசாமியின் பணி பதிவேட்டை ஆய்வு செய்தார்.

அப்போது பெரியசாமி பதவி உயர்வுக்கு கொடுத்த சான்றிதழ் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் கொடுத்த பதிவு எண் மூலம் அந்த மதிப்பெண் சான்றிதழ் அவருடையது தானா? இல்லை எனில் யாருக்கு உரியது என்பதை கண்டறிய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அவர் கொடுத்த மதிப்பெண் சான்றிதழின் பதிவு எண்ணை அரசு தேர்வுகள் துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி இருந்தனர்.

பணி இடைநீக்கம்

தற்போது அந்த மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவில் தக்கார் தமிழரசி, தலைமை எழுத்தர் பெரியசாமியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். அவர் மீது போலீசில் மோசடி புகார் கொடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்