பரமக்குடி, கமுதி ஒன்றிய அலுவலகங்களில் கொரோனா விழிப்புணர்வு

பரமக்குடி, கமுதி ஒன்றிய அலுவலகங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Update: 2020-03-19 23:15 GMT
பரமக்குடி, 

பரமக்குடி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு, பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமை தாங்கினார். ஆணையாளர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர்கள் லெட்சுமி, முருகானந்தவள்ளி ஆகியோர் வரவேற்று பேசினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உதவி திட்ட அலுவலர் சசிகலா கலந்து கொண்டு ேபசினார். இதில் அலுவலக பெண் ஊழியர்கள், பெண் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் பார்த்திபனூர் கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, ஒன்றிய துணை தலைவர் சரயு ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கமுதி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள், செயலர்களுக்கான கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையாளர் ரவி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மண்டல அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர்கள் சிவா, தீபிகா ஆகியோர், ஊராட்சி பகுதிகளில் தொடர் இருமல், சளி, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயம் சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டும் என அறிவுறுத்தினர்.

இந்தநிலையில் கமுதி வட்டார மருத்துவ அதிகாரி வினோதினி கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். அவருடன் வந்த மருத்துவ குழுவினர் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிடுவதாக ஊராட்சி தலைவர்களிடம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் பெரியசாமி கொரோனா வைரஸ் குறித்து 24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்படுகிறது. எனவே இது தேவையில்லை என ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்ததால் மருத்துவ குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையடுத்து பொதுமக்களே இல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறத்தில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த குறும்படத்தை சுகாதாரத்துறையினர் திரையிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்