அறச்சலூர் அருகே துணிகரம் கணவன்-மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி 13 பவுன் நகை கொள்ளை; மர்மநபர்கள் கைவரிசை

அறச்சலூர் அருகே கணவன்-மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கி 13 பவுன் நகையை மர்ம நபர்கள் துணிகரமாக கொள்ளையடித்து சென்றார்கள்.

Update: 2020-03-20 22:15 GMT
அறச்சலூர், 

அறச்சலூர் அருகே உள்ள 60 வேலம்பாளையம் குணாங்காட்டுவலசு திருக்கல்காட்டுதோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி பருவதம் (70). இவர்களுடைய மகன் பிரகாஷ். இவர் திருமணம்ஆகி குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார். துரைசாமியும், பருவதமும் திருக்கல்காட்டு தோட்டத்து வீட்டில் தங்கியுள்ளார்கள்.

தற்போது குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் அறச்சலூர் அருகே உள்ள எழுமாத்தூரில் இருக்கும் தன்னுடைய மாமியார் வீட்டில் பிரகாஷ் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துரைசாமியும், பருவதமும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது கதவு உடைக்கப்படும் சத்தம்கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் எழுந்து வந்து பார்த்தார்கள்.

அப்போது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் கணவன், மனைவி இருவரையும் தாக்கியது. இதில் நிலை குலைந்த இருவரையும் மிரட்டி அவர்களையே கொள்ளையர்கள் பீரோவை திறக்கச்சொன்னார்கள். பயந்துபோன இருவரும் பீரோவை திறந்து விட்டார்கள். உடனே கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அள்ளிக்கொண்டு வெளியே நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிள்களில் தப்பிசென்று விட்டார்கள். சிறிது நேரம் கழித்து துரைசாமி தன்னுடைய மகனுக்கும், உறவினர்களுக்கும் செல்போனில் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் விரைந்து வந்த பிரகாஷ் துரைசாமியையும், பருவதத்தையும் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் இதுபற்றி அறச்சலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கு பதிவாகியிருந்த தடயங்களும் சேகரிக்கப்பட்டன. கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவுசெய்தார்கள்.

இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவியை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்