தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தாமல் கிளை செயலாளர் நியமனம்: மாவட்ட செயலாளரை கண்டித்து தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை அருகே தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடத்தாமல் கிளை செயலாளரை நியமனம் செய்த மாவட்ட செயலாளரை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-22 00:00 GMT
குத்தாலம்,

தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் பகுதி கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் பொன்செய் கிராமத்தின் கிளை செயலாளராக இருந்த செல்வேந்திரன் என்பவரை நீக்கிவிட்டு அங்கு உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் தங்கள் ஆதரவாளரான மகேந்திரன் என்பவரை கிளை செயலாளராக நியமித்துள்ளனர்.

தர்ணா போராட்டம்

இதனை கண்டித்து முன்னாள் கிளை செயலாளர் செல்வேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. மாவட்ட மற்றும் ஒன்றிய செயலாளர்களை கண்டித்து அக்கட்சியை சேர்ந்தவர்களே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார், மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோல் மக்கள் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி தி.மு.க.வினரை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனை ஏற்ற தி.மு.க.வினர் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்