ஊட்டியில் கலெக்டரின் உத்தரவை மீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த விடுதிக்கு ‘சீல்’ நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஊட்டியில் கலெக்டரின் உத்தரவை மீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த விடுதிக்கு ‘சீல்’ வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-03-22 00:00 GMT
ஊட்டி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களை மூட வேண்டும். விடுதி உரிமையாளர்கள் வருகிற 31-ந் தேதி வரை எவ்வித முன்பதிவும் செய்யக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை கடந்த 17-ந் தேதி முதல் விடுதி உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் தங்கும் விடுதிகள் முன்பு மூடப்பட்டு உள்ளது என்று நோட்டீஸ் ஒட்டும்படி தெரிவிக்கப்பட்டது. இதை மீறி வெளி மாநில, வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளை யாரேனும் விடுதிகளில் தங்க வைக்கிறார்களா என்று நகராட்சி அதிகாரிகள் குழுக்களாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

விடுதிக்கு ‘சீல்’

இதற்கிடையே ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டும், சிலர் உத்தரவை மீறி சுற்றுலா பயணிகளை தங்க வைப்பதாக புகார்கள் வந்தன. அதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி, நகராட்சி கமி‌‌ஷனர் சரஸ்வதி அறிவுரையின் படி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஊட்டி சர்ச்ஹில் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 18-ந் தேதி, 20-ந் தேதி சுற்றுலா பயணிகளை தங்க வைத்தது தெரியவந்தது. மேலும் கொடைக்கானலை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர் அறை எடுத்து தங்கி இருந்தனர். உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து அந்த விடுதிக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கதவை மூடி பூட்டு போடப்பட்டது. பின்னர் நகராட்சி அதிகாரிகள் தங்கும் விடுதிக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

சுற்றுலா நகரமான ஊட்டியில் 600-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி யாராவது சுற்றுலா பயணிகளை தங்க வைப்பது தெரியவந்தால் சீல் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்