சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு பணி: கவர்னர், முதல்-அமைச்சர் கைகளை தட்டி ஆதரவு

சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு பணிக்கு கவர்னர், முதல் - அமைச்சர் கைகளை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

Update: 2020-03-22 23:08 GMT
புதுச்சேரி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் மாலை 5 மணிக்கு தங்கள் வீடுகளில் உள்ள பால்கனி, முற்றத்தில் நின்று கைகளை தட்டியும், மணி அடித்தும் நமக்கு சேவை செய்த சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதன்படி நேற்று மாலை 5 மணியளவில் கவர்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகையின் பின்பகுதி நுைழவாயிலில் நின்று பாத்திரத்தில் கரண்டியால் தட்டி ஓசை எழுப்பினார். பின்னர் கைகளையும் தட்டி, சுகாதார ஊழியர்களின் பணிக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர்களும் நின்று பாத்திரத்தில் கரண்டியால் தட்டினர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் நின்று கைகளை தட்டினார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி தனது வீ்ட்டின் பால் கனியில் நின்று கரவோசை எழுப்பினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தின் பால்கனியில் நின்று கைகளை தட்டினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் அங்கு நின்று கைகளை தட்டி, சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேபோல் புதுவையின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்பகுதியிலும், மாடியிலும் நின்று கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். சிலர் வீட்டு முற்றத்தில் நின்று கைகளை தட்டியும், பாத்திரங்களில் கரண்டியால் தட்டியும் ஓசை எழுப்பினர்.

மேலும் செய்திகள்