சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று அறிகுறியுடன் தொழிலாளி அனுமதி

சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று அறிகுறியுடன் ெதாழிலாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-23 22:30 GMT
சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே பணி செய்த இடத்தில் விடுமுறை விடப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.

இங்கு அவருக்கு தொடர்ந்து சில நாட்களாக சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா நோய் தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தில் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதனால் ஆஸ்பத்திரி வட்டார பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னர் தான் கொரோனா தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பது தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்