கர்நாடகத்தில் ஊரடங்குக்கு பிறகு மக்கள் அதிகளவில் கூடியதால் அரசு ஆதங்கம்

கர்நாடகத்தில் ஊரடங்குக்கு பிறகு மக்கள் அதிகளவில் கூடியதால் அரசு ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.

Update: 2020-03-23 23:28 GMT
பெங்களூரு,

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.

பிரதமரின் வேண்டுகோளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. கர்நாடகத்தில் கொரோனா பாதித்த பெங்களூரு உள்பட 9 மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால் மக்கள் ஊரடங்குக்கு பிறகு நேற்று பெங்களூருவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பல்வேறு பகுதிகளில் உணவகங்கள் திறக்கப்பட்டு இருந்தன. தடை இருந்தபோதும், அதில் மக்கள் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பெரும்பாலான இடங்களில் மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், சலூன் கடைகள், டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

பெங்களூருவில் குறைந்த எண்ணிக்கையில் பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மார்க்கெட்டுகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினர். மேலும் பெங்களூரு புறநகர், மைசூரு, தட்சிணகன்னடா, பெலகாவி, கலபுரகி, மைசூரு, தார்வார், குடகு உள்பட 8 மாவட்டங்களிலும் இதே நிலை தான் நீடித்தது. அந்த மாவட்டங்களிலும் நேற்று மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. மேலும் காய்கறி, பூக்கள் மார்க்கெட்டும் திறக்கப்பட்டு இருந்தன.

அந்த கடைகள், மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வீதிகளிலும் மக்கள் நடமாட்டம், வாகன நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

கொரோனா வைரசை தடுக்க மக்கள் பொதுஇடங்களில் கூடுவதை தவிர்க்க அரசு உத்தரவிட்டிருந்தும் நேற்று பொதுமக்கள் நடமாட்டம் இருந்தது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடுவதால் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்று எச்சரிக்கை விடுத்தும் அதை மக்கள் பொருட்படுத்தவில்லை என்று கர்நாடக அரசு ஆதங்கப்பட்டுள்ளது. இந்த ஆதங்கத்தை முதல்-மந்திரி எடியூரப்பா வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், அத்தியாவசி பொருட்களுக்கான கடைகளை தவிர்த்து பிற கடைகள், வணிக நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு எடியூரப்பா உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அனைத்து பகுதிகளுக்கும் வாகனங்களில் சென்று கடைகளை மூடும்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மதியத்திற்கு பிறகு கடைகள் மூடப்பட்டன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்