சென்னையில் இருந்து மலேசியாவுக்கு சிறப்பு விமானத்தில் 189 பேர் பயணம் - அனுமதி மறுக்கப்பட்ட பயணிகளால் பரபரப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் இருந்து மலேசியாவிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 189 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அனுமதி மறுக்கப்பட்ட 213 பேரால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-24 22:45 GMT
ஆலந்தூர், 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதன் காரணமாக விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தடை விதித்தது.

இதனால் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியர்கள் மலேசிய கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே அவதிப்பட்டு வருகின்றனர்.

அதுப்போல் மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில இருந்து திரும்பச் செல்ல முடியாமல் தவித்த 184 மலேசிய நாட்டினரை முதற்கட்டமாக சிறப்பு அனுமதியின் பேரில் கடந்த 21-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில்,மலேசியாவில் தவித்த 113 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது.

இந்த விமானம் மீண்டும் மலேசியாவிற்கு நள்ளிரவு 2 மணிக்கு புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தவித்து வந்த 3 குழந்தைகள் உள்பட 189 மலேசியர்களை ஏற்றிக் கொண்டு செல்ல மலேசிய தூதரக அதிகாரிகளின் பரிந்துரைத்தின் பேரில், மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இதற்கிடையே, அந்த விமானத்தில் செல்ல இருந்த 189 பேருடன், தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலாவந்த மலேசிய தமிழர்கள் 213 பேரும் தங்களையும் விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்று கூறி விமான நிலையத்திற்கு வந்தனர்.

ஆனால் அந்த விமானத்தில் 189 பேர் மட்டுமே செல்ல தான் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று கூறிய விமான நிறுவன அதிகாரிகள் அவர்களை மட்டும் அழைத்துச் சென்றனர்.

இதனால் மற்றவர்கள் தங்களையும் மலேசியா செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். குழந்தைகளுடன் மிகுந்த சிரமப்படுவதாகவும், ஓட்டல்களில் தங்கியிருப்பதால் அதிகமாக செலவு ஆவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

இந்தநிலையில் விமான நிலையத்தில் தவித்து வரும் அந்த 213 மலேசிய தமிழர்களையும், தூதரகத்தின் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்