144 தடை உத்தரவால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது - பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார்

144 தடை உத்தரவால் வேலூர் மாநகரம் வெறிச்சோடியது. பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-03-24 22:00 GMT
வேலூர், 

தமிழகத்தில் 144 தடை உத்தரவு நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி வேலூர் மாநகரில் இருந்த அனைத்து பழக்கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் மற்றும் திறந்திருந்த கடைகள் அனைத்தும் மாலை 6 மணி முதல் மூடப்பட்டது. பலர் தங்களது வீடுகளுக்கு வேக, வேகமாக சென்றனர்.

நேரம் செல்ல, செல்ல வேலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் நின்ற பஸ்கள் உடனடியாக பணிமனைக்கு சென்றன. பஸ் நிலையங்களில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடியது. இதையடுத்து சிறிது நேரத்தில் பயணிகளின் நடமாட்டமும் குறைந்தது.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் மாநகரின் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது திறக்கப்பட்டிருந்த கடைகளை மூட அவர்கள் வலியுறுத்தினர். மேலும் கூட்டமாக நின்றிருந்தவர்களை கலைத்தனர்.

இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் இருசக்கர வாகனங்களில் தீவிர ேராந்து பணியில் ஈடுபட்டனர். ஆட்டோக்கள் மூலம் 144 தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தடை உத்தரவால் வேலூர் மாநகரமே வெறிச்சோடியது. காட்பாடி பகுதியிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர் மாவட்ட எல்லைகள் 6 உள்ளது. அந்த எல்லைகளில் சாலை தடுப்புகள் வைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் முழுவதும் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்