புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்

புதுவையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-03-25 00:08 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த 22-ந் தேதி நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் அன்று இரவு 9 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து சட்டசபை வளாகத்தில் நேற்று காலை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

ரூ.2ஆயிரம் நிவாரணம்

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

கடைகள் திறந்து இருக்கும்

புதுவை மாநிலத்தில் மருந்துகடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்று இன்று (நேற்று) காலை அறிவிக்கப்பட்டது. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் பால், மளிகை கடைகள், காய்கறி கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்றுக் கொண்டு மருந்து கடைகள், பால் பூத், காய்கறி கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்படும். அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது. அவ்வாறு கூடினால் நாளை (இன்று) இரவு முதல் அனைத்து கடைகளும் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் உடனிருந்தார். 

மேலும் செய்திகள்