திட்டக்குடியில், தலைமை ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திட்டக்குடியில் தலைமை ஆசிரியர் வீட்டில் 26 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-03-24 22:15 GMT
திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரகாசம் (வயது 55). இவர் திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அரசங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர், இறந்த தனது தந்தையின் கருமகாரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான கீழ்ச்செருவாய் கிராமத்துக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று முன்தினம் அருள்பிரகாசம், தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் டிரசிங் டேபிளில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 26 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அருள்பிரகாசம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் குற்றவாளிகள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்