ஊரடங்கு உத்தரவு அமலானதையொட்டி அனைத்து கோர்ட்டுகளும் பூட்டி ‘சீல்’ வைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலானதையொட்டி அனைத்து கோர்ட்டுகளும் நேற்று பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

Update: 2020-03-25 22:45 GMT
திருப்பூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலானது. இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளும் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை மூடப்பட்டது. திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகங்கள் நேற்று காலை அங்கிருந்த ஊழியர்கள் மூலமாக பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

இதுபோல் கோர்ட்டு வீதியில் உள்ள தாலுகா கோர்ட்டுகள் அனைத்தும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்டுகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

அவசர வழக்குகள், முக்கிய ஜாமீன் வழக்குகள் உள்ளிட்டவை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் முதன்மை மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பெரிய குற்ற வழக்கில் கைதானவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க அந்தந்த மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு சென்று ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோர்ட்டு மூடப்பட்டுள்ள நாட்களில் ஏற்கனவே வாய்தா போடப்பட்டு இருந்தால் அவை ஏப்ரல் மாதம் 14-ந் தேதிக்கு பிறகே மற்ற விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்று கோர்ட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்