ஊரடங்கு உத்தரவையொட்டி சேலத்தில் சாலைகள் வெறிச்சோடின

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சேலத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.

Update: 2020-03-26 04:55 GMT
சேலம், 

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலானது.

அதன்படி, சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சேலம் மாநகரில் புதிய மற்றும் பழைய பஸ்நிலையம், சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, திருச்சி மெயின்ரோடு, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் மளிகை கடைகளை சிலர் திறந்து வைத்திருந்தனர். அங்கும் கூட்டம் சேராதபடி போலீசார் ரோந்து பணியில் சென்று ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வந்தனர். இறைச்சிக்கடைகளிலும் காலையில் கூட்டம் ஓரளவு இருந்தது.

அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் ஓடவில்லை. சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. ஏற்கனவே ரெயில்களின் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் ரெயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ்நிலையம் கூட்டமின்றி காணப்பட்டது. மேலும் ஜங்ஷன் மெயின்ரோடு, 3 ரோடு, 4 ரோடு, 5 ரோடு, குரங்குச்சாவடி பழைய பஸ்நிலையம், அஸ்தம்பட்டி, கலெக்டர் அலுவலகம் ரவுண்டானா உள்பட மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

சேலம் மாநகரில் மட்டும் 55 இடங்களில் வாகனங்கள் செல்லாதவாறு போலீசார் தடுப்பு கம்பிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது ஆஸ்பத்திரி மற்றும் மருந்துகள் வாங்க செல்வோர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்தவர்களை மட்டும் செல்ல அனுமதித்தனர். மற்றவர்களிடம் கொரோனா வைரசின் தாக்கம் பற்றி கூறியதுடன் அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

சேலம் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள 11 உழவர் சந்தைகள் மூடப்பட்டன. சேலம் ஆற்றோர காய்கறி மார்க்கெட் மற்றும் சத்திரம் காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் நேற்று காலையில் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் பெரும்பாலானோர் முகக்கவசங்கள் அணிந்தபடி வந்திருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் வேகமாக காய்கறிகளை வாங்கிவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தி கொண்டே இருந்தனர்.

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை வெளியே வியாபாரிகள் பலர் தற்காலிகமாக காய்கறிகள் வியாபாரம் செய்தனர். இதனால் காலையிலேயே ஏராளமானவர்கள் அங்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். சேலம் மாநகரில் உள்ள அம்மா உணவகங்களும் வழக்கம்போல் செயல் பட்டன. ஆனால் அங்கு கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மேலும் பொதுமக்கள் சற்று இடைவெளிவிட்டு வரிசையில் நின்று உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். சேலம் மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்