கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பஸ்நிலையத்துக்கு இடம் மாற்றம்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தூத்துக்குடி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

Update: 2020-03-27 22:30 GMT
தூத்துக்குடி, 

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது சமூக பரவலை எட்டும் நிலையில் உள்ளதால் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.

அதே நேரத்தில் காய்கறி கடை, பால் டெப்போ, பலசரக்கு கடை உள்ளிட்டவை வழக்கம் போல் திறந்து இருந்தன. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காலையில் மக்கள் மெல்ல வெளியில் தலை காட்டினர். இதனால் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட் மிகவும் குறுகலான பகுதியில் செயல்பட்டு வந்தது.

இந்த காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்படலாம் என்று கருதி மாநகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதன்படி நேற்று முதல் மார்க்கெட் பழைய பஸ்நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டது. மிகவும் விரிவான இடப்பகுதி என்பதால் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் காய்கறி வாங்கி செல்ல இது வசதியாக அமைந்துள்ளது.

மேலும் ஒவ்வொருவரும் 1 மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கி செல்லும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு உள்ளன. காய்கறி வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ள பழைய பஸ் நிலைய வளாகம் முழுவதிலும் கிருமி நாசினியை தெளித்தனர். வ.உ.சி. மார்க்கெட் வெளிப் பகுதியில் வைத்து காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. காய்கறி, பழங்கள் வரத்து குறையும் என்ற பீதியில் மக்கள் அதிகமாக காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் விலை அதிகரித்து உள்ளது.

கடந்த வாரம் பல்லாரி ஒரு கிலோ 30 ரூபாயில் இருந்து 55 ரூபாய்க்கும், சிறிய வெங்காயம் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.125-க்கும், தக்காளி கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.30-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.10-ல் இருந்து 50-க்கும், உருளைகிழங்கு ரூ.30-ல் இருந்து ரூ.50-க்கும், கேரட், பீட்ருட், சவ் சவ் உள்ளிட்டவை கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

இதே போன்று சாலையோரங்களில் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீசார் உணவு, முக கவசம் உள்ளிட்டவைகளை வழங்கினர். தெருக்களில் உணவின்றி சுற்றித்திரிந்த நாய்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வழங்கினர். மேலும் உப்பள தொழிலாளர்கள் சிலர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்