வண்டலூர் உயிரியல் பூங்காவில் தலைமை வனப்பாதுகாவலர் ஆய்வு

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தலைமை வனப்பாதுகாவலர் ஆய்வு செய்தார்.

Update: 2020-03-27 22:15 GMT
வண்டலூர்,

கொரோனா வைரஸ் பீதியால் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த 17-ந்தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளரான யுவராஜ், மாநில மற்றும் மத்திய அரசுகளின் அறிவுரையின்படி பூங்கா எடுத்துள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளான விலங்குகள் பராமரிப்பு, நோய் தொற்று தடுத்தல், நேரத்திற்கு உணவு அளித்தல் மற்றும் விலங்கு இருப்பிட பராமரிப்பு குறித்து நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது வண்டலூர் பூங்கா இயக்குனர் யோகேஷ் உடனிருந்தார். பூங்கா ஊழியர்களின் பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளான முக கவசம் மற்றும் கையுறை அணிதல், நோய் தொற்று பரவாமல் இருக்க விலங்கு இருப்பிடங்களில் லைசால் திரவம் தெளித்தல், உணவு தரம் பார்த்து கிருமிகள் அற்ற உணவுகளை வழங்குதல், பூங்கா ஊழியர்கள் சமூக விலகல் மற்றும் விலங்கு மருத்துவர்களின் அன்றாட விலங்குகள் பரிசோதனை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பார்வையிட்டார்.

பூங்கா ஊழியர்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் நெறிமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்தார். மேலும் ஆய்வின்போது பணியில் இருந்த பூங்கா ஊழியர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பூங்கா வனச்சரகர்கள், விலங்கு மருத்துவர்கள், உயிரியலாளர்கள் உடனிருந்தனர்.

மேற்கண்ட தகவல் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்